தலைப்புச் செய்திகள்

ரவி செனவிரட்ன, ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளுக்கு பேராயர் மல்கம் ரஞ்சித் சிபாரிசு செய்தாரா?

பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை அவர்கள் தற்போது வகிக்கும் பதவிகளுக்கு நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் கோரவில்லை என கத்தோலிக்கத் திருச்சபை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, கொழும்பு பேராயத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ, இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த விடயத்தைக் கூறினார்.

அந்த இரு அதிகாரிகளின் நியமனங்கள் தொடர்பாக பேராயர் மல்கம் ரஞ்சித்தோ அல்லது கத்தோலிக்கத் திருச்சபையோ ஒருபோதும் அத்தகைய கோரிக்கையை விடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் மனு குறித்து கருத்து தெரிவித்த அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ; அது அவரது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டது என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளைத் தடுக்கும் நோக்கத்தில், தவறான தகவல்களும் அவதூறான கூற்றுக்களும் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், சரிபார்க்கப்படாத சமூக ஊடக பதிவுகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.