
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் – அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை தினமும் சந்திப்பதற்கு அனுமதிக்குமாறு – அவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சாலே சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தினமும் சந்திப்பதற்கு, குற்றப் புலனாய்வுத் துறையிடம் அவரின் மனைவியும் சட்டத்தரணியும் அனுமதி கோரியுள்ளனர்.
இவ்வாறான கோரிக்கைக்கு ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் துணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைத்திய சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று (10) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சாலேயின் சட்டத்தரணிகள், வைத்தியசாலை சந்திப்பு நேரங்களில், அவருடைய மனைவியும் மகனும் அவரை தினமும் சந்திக்க அனுமதிக்கும் உத்தரவைக் கோரினர்.
இருப்பினும், சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று, கொழும்பு கோட்டை நீதவான் கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தின் மனைவி, தினசரி சந்திப்புகளுக்கு அனுமதி கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார்.
அவருடைய சட்டத்தரணி அசித் சிறிவர்தனவும், தனது கட்சிக்காரரின் நிலையைக் கண்காணிப்பது, அவரது உரிமைகளையும் நலனையும் பாதுகாப்பது, மற்றும் தொடர்புடைய முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிப்பது ஆகியவை தனது தொழில்முறைப் பொறுப்பு என்று குறிப்பிட்டு, ஒரு தனி கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.
அதில், சுரேஷ் சாலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுவதால், தனது கட்சிக்காரருடன் வழக்கமான தொடர்பு அவசியம் என்று சட்டத்தரணி சிறிவர்தன தெரிவித்துள்ளார்.


