தலைப்புச் செய்திகள்

விமல் வீரவன்சவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (25) கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தலங்கம பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை வந்த வீரவன்ச கைது செய்யப்பட்டார்.

பத்தரமுல்லவில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில், பொலிஸ் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நேற்று ஆஜராகத் தவறிய வீரவன்சவுக்கு, தலங்கம பொலிஸ் முன் இன்று ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டதாக பொலிஸ் தெரிவித்தது.

மே 18 அன்று, யுத்த வெற்றி நாள் நினைவு விழாவுக்கான ஒத்திகையின் போது, ​​முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்திற்குள் நுழைய முயன்றபோது, ​​பொலிஸாருக்கும் விமல் குழுவினருக்கும் இடையே பத்தரமுல்லவில் பதற்றமான சூழல் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும், விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் தெரிவித்தனர்.