தலைப்புச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் மரணம் தொடர்பில் இப்போது எதுவும் கூற முடியாது: பொது பாதுகாப்பு அமைச்சர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்து, இந்த நிலையில் எந்தவொரு திட்டவட்டமான முடிவையும் எடுக்க முடியாது என்று, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே ஒரு திட்டவட்டமான அறிக்கையை வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார்.

‘‘மரணம் குறித்த விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. அதன் பிறகு சட்ட வைத்திய அதிகாரிகள் காரணத்தைத் தெளிவுபடுத்துவார்கள். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்“ என அவர் மேலும் குறிப்பிட்டா்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நேற்றைய தினமே, கபில சந்திரசேன கைது செய்யப்பட்டிருந்தால், இந்த நிலைமையைத் தவிர்த்திருக்க முடியுமா என்று அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர்; நேற்று மாலைதான் இதுகுறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால், பொலிஸார் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துவிட்டதாகவும், மறுநாள் காலையில் கைது செய்யத் திட்டமிட்டிருந்ததால், இரவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழும் என்று பொலிஸார் எதிர்பார்த்திருக்க முடியாது என்றும் கூறினார்.

‘‘அவர் இதற்கு முன்னர் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவர், மேலும் நீதிமன்ற உத்தரவும் நடைமுறையில் இருந்தது’’ என்று கூறிய அவர்; ”இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் பொலிஸ் மா அதிபரிடம்விளக்கம் கோர வேண்டும். இருப்பினும், இந்தக் கட்டத்தில் உறுதியான கருத்தைத் தெரிவிக்க முடியாது. பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரே அறிக்கை வெளியிட முடியும்,’‘ என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

விமானக் கொள்வனவு தொடர்பில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி கபில சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆயினும், அவரைப் பிணையில் எடுத்தவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பிணையில் எடுத்தார்கள் எனத் தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கபிலவையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், அவர் தனது வீட்டிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.