தலைப்புச் செய்திகள்

அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

படம்: AI சித்தரிப்பு

ஈரானின் கடல் எல்லைக்குள் அமெரிக்கப் படைகள் எண்ணெய் கப்பல் ஒன்றை குறிவைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது, பதிலடி கொடுத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – சில பிராந்திய நாடுகளுடன் இணைந்து, கெஷ்ம் தீவு உட்பட பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் போர் நிறுத்தத்தை மீறியுள்ளது என்றும், ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் நேற்று தெரிவித்துள்ளது.

“போர் நிறுத்தத்தை மீறி, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத மற்றும் கொள்ளையர் படை, ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒன்றைத் தாக்கியதாகவும், கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் பதிலடியால் அமெரிக்கக் கப்பல்களுக்குக் கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.

“குற்றவாளியும் ஆக்கிரமிப்பாளருமான அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு கடந்த காலத்தைப் போலவே வலிமையாக, எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் சிறிதும் தயக்கமின்றி நசுக்கும் பதிலடியைக் கொடுக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தத்தை அமெரிக்கா மீறியதற்குப் பதிலடியாக, ஈரானியப் படைகள் “பல்வேறு வகையான பாலிஸ்டிக் மற்றும் கப்பல் எதிர்ப்பு குரூஸ் ஏவுகணைகளையும், அதிக வெடிதிறன் கொண்ட போர்க்குண்டுகளுடன் கூடிய அழிவுகரமான ட்ரோன்களையும் பயன்படுத்தியதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை தெரிவித்துள்ளது.

ஆனால், எந்தவித தூண்டுதலும் இன்றி நடந்த ஈரானியத் தாக்குதல்களை இடைமறித்ததாகவும், தற்காப்புத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) கூறியுள்ளது.

மேலும்,அமெரிக்காவின் எந்த சொத்துகளும் தாக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்தது.

”நிலைமையை மோசமாக்க நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அமெரிக்கப் படைகள் தம்மைப் பாதுகாக்கத் தயாராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது” என்றும் மத்திய கட்டளைப் பிரிவு கூறியுள்ளது.

நாட்டின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகைக்கு ஈரான் அளித்த முதல் ராணுவப் பதிலடியாக இந்த மோதல்கள் அமைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக, அமெரிக்க ராணுவம் பல ஈரானியக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளதுடன், மேலும் பல கப்பல்களைத் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.

கெஷ்ம் தீவு, பந்தர் அப்பாஸ் மற்றும் தெற்குக் கடற்கரை நகரமான மினாப் ஆகிய துறைமுகங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசுடன் தொடர்புடைய பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம், ஒரு மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி, மூன்று அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகி ஓமான் வளைகுடாவை நோக்கித் தப்பிச் சென்றதாகத் தெரிவித்துள்ளது.

திங்களன்று, ஏழு சிறிய ஈரானிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்ததை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான தனது ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் மீண்டும் தொடங்கியது.