
ஈரான் மீது தான் மேற்கொள்ளவிருந்த தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கும், இரண்டு வாரங்கள் போர் நிறுத்தமொன்றை கடைப்பிடிப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணங்கியுள்ளார்.
பாகிஸ்தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இதற்கு தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக தனது ரூத் சமூகத்தளத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானை முற்றாக அழிக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில், அதற்கான காலக்கெடுவை எட்டுவதற்கு சில மணித்தியாலங்கள் இருந்த போது, தாக்குதல் திட்டத்தை இடைநிறுத்தி, இரண்டு வார கால யுத்த நிறுத்தத்துக்கு செல்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.
‘பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்படவிருந்த அழிவுகரமான சக்தியை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.
இது இருதரப்புப் போர்நிறுத்தமாக இருக்கும். அவ்வாறு செய்வதற்கான காரணம், நாம் ஏற்கனவே அனைத்து ராணுவ இலக்குகளையும் அடைந்து, அவற்றையும் தாண்டிவிட்டோம்.
மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம்.
ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம். மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அது ஒரு நடைமுறைக்கு உகந்த அடிப்படை என்று நம்புகிறோம்.
கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வார கால அவகாசம், உடன்படிக்கையை இறுதி செய்து முழுமையாக்க உதவும்’ என ட்ரம்ப் தனது ட்ரூத் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்தத் தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, ஒரு தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டுள்ளமையை – ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தினார்.

‘ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், நமது வலிமைமிக்க ஆயுதப் படைகள்- தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும்’ என X தளத்தில் அராக்சி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வார காலத்திற்கு, ஈரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலமும், தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொள்வதன் மூலமும் – ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் எனவும் அராக்சி தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதலை நிறுத்துமாறு, கடைசி நேரத்தில் பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளுக்கு அராக்சி நன்றி தெரிவித்துள்ளார்.


