தலைப்புச் செய்திகள்

இலங்கைக்கு ஈரான் எண்ணெய் உள்ளிட்ட உதவிகளை வழங்கும்; நட்பு நாடாக ஆதரிப்பதில் உறுதியாக உள்ளோம்: தூதுவர் தெரிவிப்பு

தேவை ஏற்பட்டால் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க ஈரான் தயாராக உள்ளது என்று -இலங்கைக்கான ஈரானிய தூதுவர் டொக்டர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையை ஒரு நட்பு நாடாக ஆதரிப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் பேசிய தூதுவர்; மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் மற்றும் பிராந்திய நட்பு நாடுகள் மீது, அதன் சாத்தியமான தாக்கம் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணைப் பகுதி, போர் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு இந்த முக்கிய கடல்வழிப் பாதை திறந்தே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை எரிசக்தி அல்லது அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டால், ஈரான் தலையிடத் தயாராக உள்ளது என்று அவர் உறுதியளித்தார்.

மேலும், “இலங்கையை ஈரான் மிகவும் மதிக்கப்படுகிறது – மரியாதை செய்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கடல் பகுதிக்கு அருகே ஈரானிய கப்பலான ‘ஐரிஸ் தேனா’ மூழ்கியது குறித்தும் இந்த ஊடக சந்திப்பில்பேசப்பட்டது. இக்கப்பல் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் குறிவைக்கப்பட்டதாக தூதுவர் குற்றம் சாட்டினார்.

உயிர் பிழைத்த மாலுமிகள் மற்றும் பயிற்சி மாணவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய விருந்தோம்பல் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் ஒரு நட்புறவுப் பயணமாக அப்பகுதியில் இருந்ததாகவும், தாக்குதல் நடந்த நேரத்தில் அது போருக்குத் தயாராக இருக்கவில்லை எனவும் தூதுவர் மேலும் தெரிவித்தார்.