தலைப்புச் செய்திகள்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேலில் படம் பிடித்த இலங்கையர்களுக்கு காயம்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க முயன்றபோது காயமடைந்த நான்கு இலங்கையர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடந்த நேரத்தில், காயமடைந்த நபர்கள், அறிவிக்கப்பட்ட பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையாமல், ஒரு பொது இடத்தில் தங்கியிருந்து, அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர் என்றும், அது சமூக ஊடகங்களில் பரவியதாகவும் தெரிய வருகிறது.

அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளால் அந்த நான்கு இலங்கையர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், கண்ணாடித் துண்டுகள் அவர்களின் தலை மற்றும் உடலின் பிற பாகங்களைத் தாக்கியதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடத்தை, இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறுவதாகும் என்றும் அவர் கூறினார்.

ஏவுகணைத் தாக்குதலுக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு வெளியிடப்படும் எச்சரிக்கை ஒலிகளைக் கேட்டவுடன், தனிநபர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தகுந்த தஞ்சம் அடைய வேண்டும் என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.