
தாக்குதலுக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை சேமித்து வைப்பதற்கு உதவுவதற்காக, காலி வர்த்தக சமூகத்தினர் – காலி தேசிய வைத்தியசாலைக்கு ரூ.2.2 மில்லியன் மதிப்புள்ள நடமாடும் குளிரூட்டி களஞ்சியங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
84 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவற்றை சேமித்து வைப்பதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. குறித்த உடல்களை இங்குள்ள ஈரானிய அதிகாரிகள் ஈரானுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 84 உடல்கள் வைத்தியசாலையில் உள்ள இரண்டு நடமாடும் குளிர்சாதன களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு தொகுதி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது. மற்றொன்று காலி வர்த்தக சமூகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 04ஆம் திகதி இரவு – காலி தேசிய வைத்தியசாலையின் பிணவறைக்கு கொண்டு வரப்பட்ட 84 உடல்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன.
காலி துறைமுக பொலிஸார், காலி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, நேற்று (05) பிரதான நீதவான் சமீர தொடங்கொட மற்றும் மேலதிக நீதவான் மகேஷிகா விஜயதுங்க ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

உடல்களைப் பரிசோதித்த பிறகு, காலி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் – பிரேத பரிசோதனைகளை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நேற்று பிற்பகல் முதல் – இன்று அதிகாலை வரை பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மரணத்திற்கான காரணங்கள் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகவும், உரிய நேரத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


