தலைப்புச் செய்திகள்

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விடவும் மூன்று மடங்கு அதிக சீனியை இலங்கையர்கள் நுகர்வதாக தகவல்

உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த அளவை விடவும் இலங்கையர்கள் மூன்று மடங்கு சீனியை நுகர்கின்றார்கள் என்று, பல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் வாய்வழி சுகாதார அபாயங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆண்டொன்றுக்கு நபரொருவர் 10 கிலோகிராம் சீனி சாப்பிடலாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கப்படும் நிலையில், ​​இலங்கையில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 34 கிலோகிராம் சர்க்கரையை உட்கொள்கிறார் என்றும் டொக்டர் சந்தன கஜநாயக்க கூறியுள்ளார்.

“ஒரு ஆரோக்கியமான நபர் ஆண்டுக்கு சுமார் 10 கிலோகிராம் சீனியை உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார ஸதாபனம் பரிந்துரைக்கிறது. ஆனால் இங்குள்ள ஒருவர் ஆண்டுக்கு சுமார் 34 கிலோகிராம் சீனியை உட்கொள்கிறார்” என, ஊடக சந்திப்பொன்றில் அவர் தெரிவித்தார்.

அதிக சீனி நுகர்வு ஈறு நோய் உள்ளிட்ட பல் நோய்களுக்கு பங்களிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

“பெரியவர்களிடையே ஈறு நோய் சுமார் 50 சதவீதமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவர் ஈறு நோயால் பாதிக்கப்படுகிறார்” என்று அவர் கூறினார்.

மார்ச் 10 ஆம் திகதி தொடங்கி நொவம்பர் வரை தொடர திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு குறித்த விளக்கத்தில் உரையாற்றும் போது, டொக்டர் கஜநாயக்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

கடைசியாக தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு 2015–2016 இல் நடத்தப்பட்டது. வாய்வழி சுகாதார நிலைமைகளை மதிப்பிடுவதற்காக நாடுகள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இதுபோன்ற கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கிறது.

முந்தைய கணக்கெடுப்பின்படி, 12 வயது குழந்தைகளில் சுமார் 30 வீதானோருக்கு பல் சிதைவு இருந்தது. 1982–1983 இல் நடத்தப்பட்ட முதல் தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பின் போது கிட்டத்தட்ட 70% பேர் பல் சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

75% க்கும் அதிகமான மக்கள் ஃப்ளோரைடு பற்பசையைப் பயன்படுத்துகின்றனர். இது பல் ஆரோக்கியத்திற்கு சாதகமானது என்றும் டொக்டர் கஜநாயக்க கூறினார்.

எனினும் பற்பசையின் அதிகரித்த விலை காரணமாக, பல்பொடியை பாவிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

“பற்பொடி தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதன் கரடுமுரடான அமைப்பு பற்களை சேதப்படுத்தும்” என அவர் விளக்கினார்.