தலைப்புச் செய்திகள்

16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே 10 ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

பதினாறு முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக, ஆலோசகர் தடயவியல் மனநல வைத்தியர் தாரக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் இந்தப் போக்கு வெளிப்பட்டுள்ளதாகவும், இது உலகளவில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மனநல நிறுவனத்தின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டொக்டர் தாரக பெரனாண்டோ இந்தக் கருத்துக்களைக் கூறினார்.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் – இலங்கையில் புள்ளிவிவரத் தரவுகளின்படி, நீதிமன்றங்களால் வழக்குத் தொடரப்பட்ட, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தோராயமாக 200% அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது ஒரு கவலைக்குரிய உயர்சி என்று கூறிய அவர்; இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் 16 முதல் 22 வயதுடைய நபர்களால் சிறைச்சாலைகள் நிரப்பப்படும் என்று எச்சரித்தார்.

மேலும், பெரும்பாலான குற்றவாளிகள் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது “புத்தியில்லாதவர்கள்” என்ற ஆழமான வேரூன்றிய நம்பிக்கை சமூகத்தில் இருப்பதாகவும், ஆனால் இது ஒரு முழுமையான கட்டுக்கதை என்றும் அவர் கூறினார்.

திறந்த மனதுடன் இந்த நபர்களை அணுகி – தேவையான சிகிச்சையை வழங்குவதன் மூலம், நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் மேலும் விளக்கினார்.

இந்த நபர்கள் பெரும்பாலும் படைப்புத் திறன்களைக் கொண்டுள்ளனர் என்றும், குற்றத்திற்காக அவர்கள் பயன்படுத்தும் திறன்களை – உற்பத்தி முயற்சிகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம், மறுவாழ்வு அடைய முடியும் என்றும் டொக்டர் தாரக பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்தகைய மறுவாழ்வானது, அறிவியல் முறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் தெற்காசியாவின் மிகப்பெரிய தடயவியல் மனநலப் பிரிவு இலங்கையில் அமைந்துள்ளது என்றும் டொக்டர் தாரக பெனாண்டோ மேலும் கூறினார்.

தடயவியல் மனநலப் பிரிவின் பங்கு, குற்றம் நடந்த நேரத்தில் நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளின் மன நிலையை ஆராய்வது, விசாரணையில் நிற்கவும் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கவும் அவர்களின் தகுதியை தீர்மானிப்பது மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.