
பொது போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஒரு தேசிய திட்டத்தைத் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய அவர்; பொது பாதுகாப்பு அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொலிஸார் இணைந்து – போதைப்பொருள் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் சாரதிகளைச் சோதிக்கவும் வீதிப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் – நாடு தழுவிய திட்டத்தை செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக, போக்குவரத்துத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு போதைப்பொருள் பாவித்து விட்டு, வாகனம் ஓட்டுவதை ஒழிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
சாரதிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களிடம் சீரற்ற போதைப்பொருள் சோதனைகளை நடத்துவதற்கு – பொலிஸாருக்கு இப்போது சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது என்றும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
”இந்த வாரம் கொழும்பில் நடமாடும் ஆய்வக சோதனை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சோதனை செய்யப்பட்ட 59 சாரதிகளில்ட 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் காட்டப்பட்டது. இது ஒரு தீவிரமான மற்றும் ஆபத்தான சூழ்நிலை” என்றும் அவர் விவரித்தார்.
போக்குவரத்து ஊழியர்களிடையே உள்ள போதைப்பொருள் பயன்பாடானது, பயணிகளுக்கு மட்டுமன்றி, அவர்களின் குடும்பங்களுக்கும், பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றது எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
பஸ் உரிமையாளர்கள் மற்றும் சங்கங்கள் – போதைப்பொருள் பயன்படுத்தும் ஊழியர்களை நீக்கி, தொழில்துறையில் தொழில்முறை தரத்தை பராமரிக்க பயிற்சி பெற்ற, உடல் தகுதியுள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களில் 2,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட 1,800 பேர் உயிரிழந்ததாகவும், போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையை இது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.

இங்கு உரையாற்றிய பொதுப் பாதுகாப்ப அமைச்சர் ஆனந்த விஜேபால; ”இலங்கையில் தினமும் – வீதி விபத்துக்களில் ஏழு முதல் எட்டு பேர் வரை பலியாகிறார்கள். 2026 ஆம் ஆண்டில் ஒரு தேசிய விபத்து தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 2026 ஆம் ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பயன்பாட்டிற்காக 480 சாரதிகள் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் 135 விபத்துக்கள் பதிவாகியுள்ளன” என்றார்.
எச்சில் அடிப்படையிலான சோதனை உட்பட சோதனை முறைகளை அரசாங்கம் வலுப்படுத்தும் என்றும், தேவைப்பட்டால் போதைப்பொருள் பாவிப்பவர்கள் – வாகனம் ஓட்டுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்களை திருத்தும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தேசிய போதைப்பொருள் தடுப்புத் திட்டம் – ஒழுக்கமான மற்றும் தொழில்முறை போக்குவரத்து பணியாளர்களை உருவாக்குவதையும், பயணிகளுக்கு பாதுகாப்பான பொது போக்குவரத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.


