தலைப்புச் செய்திகள்

மின்சார சபையை கலைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, 500 ஊழியர்களுக்கு கடுமையான சிரமம்

இலங்கை மின்சார சபையை (CEB) கலைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, சுய விருப்பின் பேரில் ஓய்வுக்கு விண்ணப்பித்த 2,113 ஊழியர்களில் கிட்டத்தட்ட 500 பேர் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் அவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயரும் திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், இந்தத் தாமதத்தினால் அதனைத் தொடர முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த ஊழியர்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தாலும், மின்சார சபையைக் கலைக்கும் செயல்முறையில் ஏற்பட்ட தாமதம் – அவர்களை அவ்வாறு செய்வதைத் தடுத்து, அவர்களை ஒரு கடினமான சூழ்நிலைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார சபை மாறுதல் பணிக்குழுவின் தலைவர் பொறியாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லவிடம், பாதிக்கப்பட்ட மின்சாரஎசபை ஊழியர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்த பொறியாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்ல, இந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகவும் மனிதாபிமான இயல்புடையவை என்றார். தங்கள் குடும்பங்களுடன் குடிபெயரத் திட்டமிட்டிருந்த சில ஊழியர்கள் இப்போது கணவன் அல்லது மனைவி மட்டுமே குழந்தைகளுடன் வெளிநாடு சென்றுள்ளனர், அதே நேரத்தில் மற்ற மனைவி அல்லது கணவர் இலங்கையில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊழியர்களில் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்காகக் காத்திருக்கும் நபர்கள் மற்றும் தேவையான வைத்திய சிகிச்சையை மேற்கொள்வதற்காக விரைவில் தங்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்று நம்புபவர்கள் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஊழியர்களின் ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கும், அவர்களுக்குச் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை விடுவிப்பதற்கும், இலங்கை மின்சார சபையானது, கலைக்கப்பட்ட திகதியை அறிவிக்க வேண்டும் என்றும் மாற்ற பணிக்குழு விளக்கியது.

இருப்பினும், இதைச் செய்வதற்கு முன்னர் – ஐந்து முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று பொறியாளர் ஹெடிகல்ல கூறினார்.

இந்த ஐந்து தேவைகளில் நான்கு ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மின்சாரக் கொள்கைக்கான பணிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மீதமுள்ள இந்தப் பணி முறையாக முடிந்ததும், தொடர்புடைய திகதியை அறிவிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.