தலைப்புச் செய்திகள்

270 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் சிக்கின: படகுகளுடன் சந்தேக நபர்கள் கைது

சுமார் 270 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றையும் பலநாள் மீன்பிடிப் படகுகளையும் இரண்டையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் – மேற்படி போதைப்பொருட்களை வைத்திருந்த இரண்டு படகுகளை – கைப்பற்றப்பட்டதோடு, 11 சந்தேக நபர்களும் கைதாகினர்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ​​ஏராளமான போதைப்பொருட்களை கொண்டு சென்ற இழுவை படகுகள் நேற்று கைப்பற்றப்பட்டன.

சோதனையின் போது, ​​படகுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பொலிஸார் வழங்கிய உளவுத்துறை தகவலின் அடிப்படையில், படகுகளைப் பயன்படுத்தி, விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, ​​முதல் மீன்பிடி இழுவை படகில் ஐந்து சந்தேக நபர்களும், இரண்டாவது படகில் ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள், இரண்டு இழுவை படகுகள் மற்றும் போதைப்பொருள் தொகுதி தற்போது மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு செல்லப்படுவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.