அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு

🕔 March 2, 2016

Addalaichenai - 01
– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட வாகனத் தரிப்பு மற்றும் அங்காடி வியாபாரத்துக்கான கட்டணங்களை அறவீடு செய்வதற்குரிய உரிமம், அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இரண்டு வருடங்களாக குத்தகைக்கு வழங்கப்படாமை குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். தாவூஸ் என்பவர் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார்.

மேற்படி உரிமத்தினை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான ஏல விற்பனையினை, 2015 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபை மேற்கொள்ளவில்லை என்றும், 2016 ஆம் ஆண்டுக்கான ஏல விற்பனையினை மேற்கொள்வதற்கு இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரம் சம்பந்தமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளரிடம் பலமுறை – தான் வினவியதாகவும், அதன்போது இந்த விடயம் குறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செயலாளர் தன்னிடம் உறுதியளித்ததாகவும் முறைபாட்டாளர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், மேற்படி உரிமத்தினை 2016 ஆம் ஆண்டுக்காவது குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளைக்கூட, அட்டாளைச்சேனை பிரதேச சபை மேற்கொள்ளவில்லை என, முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அடுத்தடுத்தள்ள பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகள், வாகனத் தரிப்பு மற்றும் அங்காடி வியாபாரத்துக்கான கட்டணங்களை அறவீடு செய்வதற்குரிய உரிமையை குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளதாக, முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, வாகனத் தரிப்பு மற்றும் அங்காடி வியாபாரத்துக்கான கட்டணங்களை அறவீடு செய்வதற்குரிய உரிமையை, குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான ஏல விற்பனையை 2015 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனைப் பிரதேச சபையினர் ஏன் மேற்கொள்ளவில்ல என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதோடு, 2016 ஆம் ஆண்டுக்கு மேற்படி உரிமத்தினை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்குரிய ஏல விற்பனையை உடனடியாக நடத்தும்படி அட்டாளைச்சேனை பிரதேச சபையினருக்கு உத்தரவிடுமாறும் முறைப்பாட்டாளர் தாவூஸ் என்பவர், கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்