தலைப்புச் செய்திகள்

தங்கள் நிறுவனத்துக்கு சதொச வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், மகனுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஜெரோம் கென்னத் பெனாண்டோ ஆகியோர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று (05) காலை இவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

ஜோன்சன் பெனாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில், சதோச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் அவருடையது இளைய மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் திட்டமிட்டபடி நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் முன் ஆஜராகத் தவறினால், நீதிமன்றத்திடம் பிடி விராந்து பெறப்படும் என்று பொலிஸார் எச்சரித்திருந்தனர்.

லங்கா சதோசவுக்குச் சொந்தமான லொறி உட்பட அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது அரசுக்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதே சம்பவம் தொடர்பாக, ஜோன்ஸ்டன் பெனாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், சதோசவின் போக்குவரத்து முகாமையாளராகப் பணியாற்றிய இந்திக ரத்னமலால நேற்று (04) கைது செய்யப்பட்டார்.

வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஜனவரி 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அமைச்சரின் மகன் ஜோஹான் பெனாண்டோவின் வேண்டுகோளின் பேரில், முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்தில் கடமைகளுக்கு சதோசவுக்குச் சொந்தமான லொரியைப் பயன்படுத்துவதற்கு வசதியாக, போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் முன்னாள் சதோச போக்குவரத்து முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.