தலைப்புச் செய்திகள்

கஃபதுல்லா பள்ளிவாசலில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 12 பேரிடம் பணம் பெற்ற நபர் தலைமறைவு

பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவானதாகக் கூறப்படும் நபர்

மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிவாசலில் (ஹரம் ஷரீப்) வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 12 பேரிடம் – தலா 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ள நபர் ஒருவருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். கபீர் என்பவருக்கு எதிராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.பி. அப்துல் சலாம் என்பவர், கடந்த நொவம்பர் மாதம் 26ஆம் திகதி – இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கபீர் எனும் மேற்படி நபர், அட்டாளைச்சேனைக்கு வந்திருந்த நிலையில்; மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிவாசலில் (ஹரம் ஷரீப்) பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், அவர்களை அந்த வேலைக்கு அனுப்புவதற்காக 80 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் எனவும் கூறியுள்ளார்.

அந்த வகையில், முற்பணமாக 50 ஆயிரம் செலுத்துமாறும், வைத்திய பரிசோதனைக்கு செல்லும் போது, மிகுதி 30 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார் என, முறைப்பாட்டாளர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெவித்தார்.

கொழும்பிலுள்ள தனக்கு மிகவும் அறிமுகமான நம்பிக்குரிய நபர் ஒருவர் மூலமாகவே, மேற்படி நபர் வந்து – முறைப்பாட்டாளரை சந்தித்துள்ளார்.

“குறித்த நபர் பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவானமையை அடுத்து, கொழும்பிலுள்ள நபரிடம் இது குறித்து சொன்னோம். அந்த நபரின் பேச்சை நம்பியே அவரை எம்மிடம் அனுப்பியதாகவும், அவருக்கு எதிராக எங்கு முறைப்பாடு செய்தாலும், தான் வந்து வாக்குமூலம் வழங்கத் தயாராக உள்ளதாகவும் கொழும்பிலுள்ள நபர் எம்மிடம் கூறியுள்ளார்” என, முறைப்பாட்டாளர் புதிது செய்தித்தளத்திடம் மேலும் தெரிவித்தார்.

கபீர் எனும் மேற்படி நபர் கிண்ணியாவில் பிறந்தவர் என்றும், தம்பலகாமம் பகுதியில் திருமணம் முடித்துள்ளார் எனவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டார்.

மேற்படி நபரின் வங்கிக் கணக்குக்கு – மேற்குறிப்பிட்ட 12 பேரும் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர். அதற்கான ரசீதுகளும் முறைப்பாட்டாளரிடம் உள்ளது.

ஏமாற்றியதாகக் கூறப்படும் நபருடன் பேசுவதற்காக, அவரின் தொலைபேசி இலக்கத்தை முறைப்பாட்டாளர் அழைத்த போதும், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.