தலைப்புச் செய்திகள்

டெக்ஸி சாரதிகள் தொழில் செய்வதைத் தடுத்த பொலிஸாருக்கு இடமாற்றம்

எல்ல சுற்றுலா வலயத்தில் டெக்ஸி சாரதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உள்ளூர் டெக்ஸி சாரதிகளால் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் குறித்து புகார் அளித்துள்ள பிக்மீ மற்றும் ஊபர் போன்ற சேவைகளுக்காக இயங்கும் சாரதிகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிசம்பர் 21ஆம் திகதி நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு குழு சாரதியை தாக்க முயன்றதாகவும், வாகனத்தை சேதப்படுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் பணிபுரியும் போது, தான் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறிய ஒரு பெண் சாரதியிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, எல்ல பகுதியில் பிக்மி டெக்ஸி சாரதிகளை தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் – வற்புறுத்தும் வீடியோ ஒன்று, டிசம்பர் 19 அன்று, சமூக ஊடகங்களில் பரவியது.

இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைக்காக பண்டாரவல பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மூன்று சந்தேக நபர்களும் இன்று, டிசம்பர் 22 அன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.