
பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப், 15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில் இன்று (25) அவரின் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
முஷாரப்பின் இணைப்பாளராக செயற்பட்ட பொத்துவிலைச் சேர்ந்த நியாஸ் என்பவரிடம், ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று, அதற்காக ஒரு காசோலையை கையெழுத்திட்டு நியாஸிடம் கொடுத்துவிட்டு, பணத்தை இதுவரை மீளத் தராமல் ஏமாற்றி வருகிறார் என, விசேட குற்ற விசாரணைப் பிரில் (SCIB) நியாஸ் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக முஷாரப்பை பல முறை அழைத்தும் சமூகமளிக்காத நிலையில், பொத்தவில் நீதவான் நீதிமன்றில் இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஷாரப் – இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 02ம் திகதி – பொத்துவில் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட நியாஸ் சார்பில் சட்டத்தரணி றாஸி ஜாபீர் ஆஜரானார். பண மோசடியில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்ப்ட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஷர்ரப் சார்பில் சட்டத்தரணிகளான சாதீர், உவைஸ், முகைதீன் ஆகியோர் உட்பட பலர் ஆஜராகி இருந்தனர்.


