
– பாறுக் ஷிஹான் –
நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, கோரம் இன்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) காலை – கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது சபையில் கோரமின்மை காரணமாக, சபை அமர்வை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்திற்கு மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான சபை அமர்வைக் கூட்டுவதற்காக, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி, விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமும் உறுப்பினர்களுக்கு பதிவு தபால் மூலமும் அறிவித்திருந்தார்.
இருந்த போதும் இன்றைய அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள் மட்டுமே வருகை தந்தனர். இதனையடுத்து, சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டும் வேறு உறுப்பினர்கள் யாரும் 10.30 மணிவரை சமூகமளிக்கவில்லை.
புதிய தவிசாளர் தெரிவினை நடத்துவதற்கான சபை அமர்வுக்கான கோரம் 50 வீதம் என்பதால், 07 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதனால் 50 வீத கோரமின்றி புதிய தவிசாளரை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி, தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்தில் இடம்பெறும் என்றும் அதற்கான பணிகளை தான் முன்னெடுப்பதாகவும் தெரிவித்து அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தார்.
நிந்தவூர் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என 13 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
இன்றைய அமர்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 04 , தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்கள் , ஐக்கிய மக்கள் சக்தி 01 உறுப்பினர் என, 7 பேர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்த ஆதம்பாவா அஸ்பர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என, வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்தார்.
இதனையடுத்து வெற்றிடமாகியுள்ள தவிசாளர் பதவிக்கு பிரதித் தவிசாளராக கடமையாற்றி வந்த சட்டத்தரணி எம்.ஐ. இர்பான் – பதில் தவிசாளராக கடந்த திங்கட்கிழமை (10) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.





