
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மற்றொரு நபர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் முச்சக்கர வண்டி சாரதியாவார். அவர் காலி – ஹியாரே பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய நாள், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் காலி மற்றும் மாத்தறைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளில், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்ததாகவும், தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் தப்பிச் செல்ல உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஒரு தொகை பணத்தை வழங்கியதாகவும், அவரின் உதவிக்காக 20,000 ரூபாய் பணம் பெற்றார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை, வெலிகம பிரதேச சபைத் தவிசாளரின் கொலை தொடர்பாக மூன்று நபர்களை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைத செய்திருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, குற்றத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் பெண் உள்ளிட்ட மூவர் கைதாகினர்.
கைது செய்யப்பட்ட இடத்தில் இருந்த பலர் – பொலிஸாரடன் மோதலில் ஈடுபட்டனர் என்றும், இதன் விளைவாக பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்றையும், 1.2 மில்லியன் ரூபாய் பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தலைவர் விக்ரமசேகர புதன்கிழமை (22) வெலிகம பிரதேச சபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்திய நபர், வெள்ளைச் சட்டை அணிந்து, கருப்பு முகமூடி அணிந்த நிலையில், ஒரு கடிதத்தில் கையெழுத்திடும் சாக்கில் தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
சந்தேக நபர் தனது உத்தியோகபூர்வ மேசையில் அமர்ந்திருந்த தலைவர் விக்ரமசேகர மீது நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதை, பின்னர் ஒரு கூட்டாளியுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.

தலைவர் தலை, மார்பு மற்றும் வயிற்றில் காயமடைந்து மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் பின்னர் உயிரிழந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, பொறுப்பானவர்களை விசாரிக்கவும் கைது செய்யவும் SDIG கித்சிறி ஜெயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டன.



