தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் தொலைந்த பணப்பையை, கண்டெடுத்து ஒப்படைத்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் நேர்மைக்கு பாராட்டு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் தொலைந்து போன பணப்பையை திருப்பிக் கொடுத்ததன் மூலம், பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள்கள், அவர்களின் நேர்மைக்காக பாராட்டப்பட்டுள்ளனர்.

கொன்ஸ்டபிள் யமுனா தம்மிகா குமாரி எதிரிசிங்க மற்றும் கொன்ஸ்டபிள் சமன்மாலி ஆகியோர் ஒக்டோபர் 23ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள திம்பிரிகஸ்யாய வீதியில் அந்தப் பணப்பையைக் கண்டெடுத்துள்ளனர்.

அந்தப் பணப்பை பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சப்ரினா கெமரூன் என்பவருக்குச் சொந்தமானது என்று அடையாளம் காணப்பட்டது. அதனையடுத்து, அவர் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு அவர் அழைக்கப்பட்டார். அங்கு அந்தப் பணப்பையை அந்தப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் சுமித்ர டி சில்வா முறையாக ஒப்படைத்தார்.

அந்தப் பணப்பையில் இலங்கைப் பணம் 6,000 ரூபாய், யூரோக்கள், அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட்கள் (அவற்றின் இலங்கைப் பெறுமதி 06 லட்சம் ரூபாய்) மற்றும் கிரெடிட் காட்கள், சர்வதேச சாரதி அனுமதி அட்டை, கடவுச் சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் இருந்தன.