தலைப்புச் செய்திகள்

இரண்டு தேங்காய் திருடிய தகராறில் நடந்த கொலை: முதலாவது சந்தேக நபருக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களை திருடியதாகக் கூறப்படும் தகராறில், தேங்காய் பறிக்கப் பயன்படுத்தப்பட்ட உலோகக் கம்பியைப் பயன்படுத்தி மற்றொரு நபரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (24) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நியதகல-வெலிய பகுதியில், 2001 ஒக்டோபர் 30 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவர், தேங்காய் பறிக்கும் கொக்கை கம்பியால் தாக்ப்பட்டார்.

திடீர் தூண்டுதல் அல்லது அசாதாரண மனநிலை காரணமாக இந்தக் கொலை நடக்கவில்லை என்றும், கொலையாளி – தற்காலிகமாக கட்டுப்பாட்டை இழந்தார் என்பதை நிராகரித்த நீதிபதி, இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

சாட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பின்னர், முதல் சந்தேக நபர் ரஞ்சித் தர்மசேன மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவர் கொலைக் குற்றவாளி என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி நவரத்ன மாரசிங்க, கூட்டாகவும் தனித்தனியாகவும் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த பிறகு, முதல் சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டின் அனைத்து அத்தியாவசிய கூறுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரசு தரப்பு நிரூபித்துள்ளது என்பது நீதிமன்றத்திற்கு தெளிவாகத் தெரிந்தது என்று குறிப்பிட்டார்.

இறந்துவிட்ட இரண்டாவது சந்தேக நபர் மற்றும் மூன்றாவது சந்தேக நபருக்கு எதிராக ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது நம்பகமான ஆதாரங்கள் எதுவும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவில்லை என்று – இதன்போது நீதிபதி கூறினார்.

அதன்படி, இரண்டாவது சந்தேக நபர் – கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளித்த நீதிபதி, அவரை வழக்கில் இருந்து விடுவித்தார்.

முதல் குற்றவாளி கோட்டகே ரஞ்சித் தர்மசேன மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தீர்மானித்தது. அதன்படி, அரசு தரப்பு தாக்கல் செய்த கொலைக் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது.