தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் அபாண்டம் பரப்பிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஹனீஸ்

– றிசாத் ஏ. காதர் –

ஒலுவில் – களியோடை ஆற்றுப் பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அதனுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக பெண் மாணவிகளை தொடர்புபடுத்தி சமூக ஊடகத்தில் அவதூறு எழுதிய நபருக்கும் அதனை பகிர்ந்தவர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞானத்துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.எம். ஹனீஸ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

மேற்படி குழந்தை விவாகரத்தை வைத்துக் கொண்டு, எந்தவிதமான முகாந்திரமும் இன்றி, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மீதும் அங்குள்ள மாணவிகள் மீதும் அபாண்டம் சுமத்தும் வகையில், சமூக ஊடகத்தில் பதிவுகளை பரப்பியமை பாரிய குற்றம் எனவும் பள்ளிவாசல் சம்மேளத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஹனீஸ் கூறினார்.

”சுமார் 08 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், நூற்றுக்கணக்கான விரிவுரையாளர்களும், பலநூறு கல்விசாரா உத்தியோகத்தர்களும் கடமையாற்றி வருகின்றனர். எனவே, வீதியில் கைவிடப்பட்டதாக கூறப்படும் ஒரு குழந்தை – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவருடையது என அபாண்டம் சுமத்தும் போது, மேற்குறிப்பிட்ட அனைத்துத் தரப்பினரின் கௌரவமும் பாதிக்கப்படுகிறது” என்று தெரிவித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ்; அவ்வாறான அபாண்டத்தை வெறுமனே கடந்து செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகளிலும், நாட்டிலும் உயர்கல்வி கற்பதில் பெண்கள் ஆர்வம் காட்டி வரும் தற்போதைய காலகட்டத்தில், இவ்வாறான அபாண்டங்கள் – அதற்குத் தடையாக அமைந்து விடலாம் எனவும் அவர் கவலை கூறினார்.

எனவே, பெண்கள் கல்வி கற்பதற்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்களே, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவிகள் தொடர்பில் அபாண்டங்களை எழுதியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

”பல்கலைக்கழக மாணவிகளை தொடர்புபடுத்தி எழுதப்பட்ட அபாண்டங்களை, மிகவும் கடுமையான குற்றமாகவே நான் பார்க்கிறேன். இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போதுதான், இதன் பின்னர் – இது போன்ற கீழ்தரமான செய்கைகளில் இறங்குவதற்கு மற்றவர்களும் அச்சப்படுவார்கள்” எனவும் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான ஹனீஸ் மேலும் தெரிவித்தார்.