தலைப்புச் செய்திகள்

போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையான மாணவர்களைக் கொண்ட பிரதேசங்கள் பற்றி அறிவிப்பு

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன எனறும், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தில் சில பகுதிகள் – பாடசாலை மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக அதிக சந்தர்ப்பமுள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கூறியுள்ளது.

நண்பர்களின் செல்வாக்கு – பாடசாலை மாணவர்களின் போதைப்பொருள் பயன்பாட்டை பாதிக்கும் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாடசாலைகளில் போதைப்பொருள் கொள்கைகள் செயல்படுத்தப்படாதது, பாடசாலை போதைப்பொருள் தடுப்புக் கொள்கையை அமல்படுத்துவதில் அதிபர்கள் மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்கள் ஆர்வம் காட்டாமை ஆகியவை, பாடசாலை மாணவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்த காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சிதைந்தை குடும்பச் சூழலில் மன அழுத்த சூழ்நிலைகள், பிள்ளைகளைப் புறக்கணித்தல், குடும்பம் மற்றும் பிரதேசங்களில் போதைப்பொருட்களின் பரவல், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் போதைப்பொருள் பாவனையை தூண்டும் காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை போதைப்பொருள் குற்றங்களுக்காக 206 சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 39 சிறுவர்கள் நன்னடத்தையில் நன்னடத்தை இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.