தலைப்புச் செய்திகள்

வசிம் தாஜுத்தீன் மரணம் தொடர்பில், புதிய விசாரணை நடத்துமாறு அவரின் மாமா கோரிக்கை

கொலை செய்யப்பட்டார் என நம்பப்படும் வசிம் தாஜுதீனுடைய மரணம் குறித்து புதிய விசாரணைகளை நடத்துமாறு அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த தாஜுதீனின் மாமா; கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழு, வாசிம் தாஜுதீன் சித்திரவதை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக தீர்மானித்தனர் எனக் கூறினார்.

“மே 2012 இல், தாஜுதீன் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் அந்த இடத்திற்கு வந்தபோது, ​​அவர் காரின் பயணிகள் இருக்கையில் இருந்தார். அந்தக் கார் குறைந்தளவு சேதமடைந்திருந்தது. இதுபோன்ற விபத்தில் ஒருவர் இறப்பதென்பது ஆச்சரியமாக இருந்தது” என்றும் தாஜுதீனின் மாமா தெரிவித்தார்.

“அந்த நேரத்தில் மரணம் குறித்த அறிக்கையில், அவர் அதிக வேகமாகவும் குடிபோதையிலும் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தின் தாக்கத்தில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது”.

“நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, ​​தாஜுதீனின் மரணம் – பொது மேடைகளில் ஒரு முக்கிய தலைப்பாக இருந்தது. உடலை தோண்டி எடுத்து புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரியபோது, ​​குடும்பத்தினர் சம்மதித்தனர். அந்த விசாரணையில் முந்தைய அறிக்கைக்கு மாறாக, தாஜுதீன் சித்திரவதை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார் என்பது தெரியவந்தது” என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் தாஜுதீனுடைய மரணம் தொடர்பில், அவரின் குடும்பத்துக்கு இதுவரை எந்த அரசாங்கத்திடமிருந்தும் நீதி கிடைக்கவில்லை என்று கூறிய தாஜுதீனின் மாமா, 13 ஆண்டுகளாகி விட்ட நிலையில், புதிய அரசாங்கம் இந்த வழக்கை எடுத்து மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“இது ஏன் செய்யப்பட்டது? அவர் ஒரு ரகர் வீரர் என்பதால்தானா? நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எந்த அரசாங்கமும் எங்களுக்கு ஒரு தீர்வை வழங்கவில்லை. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய அரசாங்கம் இந்த விஷயத்தை எடுக்கும் என்றும், பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்த அரசாங்கமும் இதை தீர்க்கத் தவறினால், எதிர்காலத்தில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இருக்காது” என்று அவர் மேலும் கூறினார்.

2012ஆம் ஆண்டு மே மாதம், கொழும்பில் உள்ள ஷாலிகா மைதானத்திற்கு அருகில் எரிந்த காரில் 28 வயதான வாசிம் தாஜுதீனின் எரிந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அந்த சம்பவம் ஒரு விபத்து என்று தீர்ப்பளிக்கப்பட்டது.