
– நூருல் ஹுதா உமர் –
சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அறுகம்பேக்கு படை எடுக்கவில்லை. இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு ஒரு தளமாக அறுகம்பேயினை பாவிக்கப் போகின்றார்கள். பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தளங்கள் – இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அறுகம்பேயில் ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு – அவர்கள் யூத கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக மிக முக்கிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே கடந்து போகும் ஒன்றல்ல எனவும் அவர் எச்சரித்தார்.
முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் கல்முனைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு – அவர் பேசும்போதே, இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்; பெருந்தலைவர் அஸ்ரப் மரணித்து 25 வருடங்கள் ஆகியுள்ள இந்த சூழ்நிலையில் – அவர் விட்டுச் சென்ற பணிகள் முழுமையாக நிறைவேறி உள்ளதா என்று நாங்கள் வினவ வேண்டி இருக்கின்றது.
மிக முக்கியமாக அவர் வேண்டி நின்ற வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வு, பிராந்திய நிர்வாக பிரச்சனைகளுக்கான தீர்வுகள் போன்றவை இன்னும் தீர்க்கப்படாது இருக்கின்றன. இச்சூழ்நிலையில் மிக முக்கியமான கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இன்று காஸாவில் இஸ்ரேல் யூத சக்திகள் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலஸ்தீன வரலாற்றை இல்லாமல் ஆக்குவதற்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான ஒரு கொடுமையான மனிதாபிமானம் இல்லாத ஒரு கூட்டம், காஸாவில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் நீர் போன்றவற்றை இல்லாமல் செய்து, பட்டினியில் மக்களை மரணப்படுக்கையில் வைத்திருக்கின்றது. அதே கொடூர சக்தி, இன்று இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் – நாங்கள் வசிக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் – அருகம்பே பகுதியில் உல்லாசமாக திரிகின்றது. அது மட்டுமல்லாமல் இன்று அவர்கள் அங்கு அமைதியாக இருக்கின்ற மக்களை ஆத்திரமூட்டச் செய்கின்ற வகையில், பல நடவடிக்கையில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விடயமாக மாறி இருக்கின்றது.
நான் மிக நீண்ட காலமாக பொத்துவில் அருகம்பே பகுதியில் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி ஆதாரத்துடன் சில விடயங்களை ஆய்வு செய்த பின்புதான், இப்பொழுது இந்த கருத்தினை பகிர்ந்து கொள்கின்றேன். அவர்கள் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்தினை நிறைவேற்றுகின்ற உளவு பிரிவான மொசாட்டினை சேர்ந்தவர்கள். அதேபோன்று, ராணுவத்தில் பணியாற்றுகின்றவர்கள். அவர்கள் இன்று உல்லாச பயணிகள் போன்று பொத்துவில் பகுதியில் முகாமிட்டு முஸ்லிம் சமுதாயத்தை ஆத்திரமூட்டச் செய்கின்ற கைங்காரியமாக, பொத்துவில் பகுதியில் உள்ள மபாஷா பள்ளிவாசல் அருகில் அவர்களுடைய சபாத் என்ற யூத ஆலயத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த ஆலயம் ஒரு சட்ட விரோத ஆலயம் .இது சம்பந்தமாக அப்பிரதேச மக்கள் பல தரப்பினரிடம் முறையிட்டும், இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை. அதற்கான அனுமதி, கட்டட அனுமதி ஏனைய உள்ளூராட்சி விதிகளின் படி அனுமதி வழங்கி இருக்கின்ற பிரதேச சபையும் மௌனமாக இருப்பது பெரும் கண்டனத்துக்குரிய விடயம் ஆகும் .
அவர்களுக்கு உரித்தான சட்டத்தை அமுல்படுத்தி அந்த சபாத் இல்லத்தை மூடுவதற்குரிய எந்த ஒரு பகிரங்க நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதைவிட ஊடகவியலாளர்கள் இந்த விடயம் தொடர்பாக கேள்வி கேட்கின்ற போது, பிரதேச சபை நிர்வாகமும் அதன் தவிசாளர் மழுப்பலான பதிலைதான் தெரிவித்திருக்கின்றார்கள்.
இது தவிர, என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? எந்த நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது? ஜனாதிபதிக்கு இது தொடர்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்காது – பிரதேச சபைத் தவிசாளர் பொறுப்பற்ற முறையில் அவர் நடந்திருக்கின்றார். இதன் காரணமாக, அவர்கள் இரண்டாவது சபாத் இல்லம் ரூபாஸ் ஹோட்டல் அருகே ஆரம்பித்திருக்கிறார்கள்.
இரண்டாவது சபாத் இல்லமும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது
கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதிய இரண்டாவது சபாத் இல்லத்தில் அவர்களது மத நிகழ்ச்சிகள் நிறைவேறி இருக்கின்றது. இது சம்பந்தமாக பொத்துவில் இளைஞர்கள் தங்களது முகநூலில் கண்டனத்தை தெரிவித்த போது, பொலிஸாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் அந்த இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து பாரிய விசாரணைகளை மேற்கொண்டு அச்சுறுத்திருக்கிறார்கள்.

திட்டமிட்ட அடிப்படையில் இந்த விடயங்கள் நடைபெற்று வருகின்றன. ஒன்றாக இருந்த சபாத் இல்லம் இரண்டாக மாறியிருக்கிறது.
இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு ஒரு தளமாக அருகம்பையை பாவிக்கப் போகின்றார்கள் என்பது தான் இதில் உள்ள மர்மம். இந்த நாட்டில் பல சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. ஹிக்கடுவை, பாசிக்குடா, பெந்தோட்டை, நுவரெலியா, கொழும்பு மற்றும் கண்டி இருக்கின்றன. நிலாவெளி இருக்கின்றது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நிரந்தரமாக – குடியிருப்பாளர்கள் போன்று நிலங்களை வாங்கி செயற்படுகிறார்கள். அப்படியென்றால், பூகோள அரசியலில் பெரும் சதியாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
தெற்காசியாவில் பெரும் நாடு இந்தியாவில் கூட இவ்வாறு முகாமிடவில்லை. பூட்டான் மற்றும் நேபாளத்தில் கூட முகாமிடவில்லை. மாலைதீவில் கூட இவ்வாறு படையெடுக்கவில்லை. இதில் எமக்கு இருக்கும் அச்சம் என்னவென்றால், முஸ்லிம் பெரும்பான்மையாக பலத்துடன் இருக்கின்ற ஒரே ஒரு மாகாணம் கிழக்கு மாகாணம்.
இந்த கிழக்கு மாகாண முஸ்லிம்களுடைய அரசியல் பலத்தை இல்லாமல் செய்வதற்கும், ஏனைய பௌத்த மற்றும் தமிழ் இனங்களுடன் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஒற்றுமையை இல்லாமல் செய்வதற்குமான சதி திட்டத்தின் ஓர் அங்கமாக அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் முகாமிடுவதை நான் பார்க்கின்றேன்.
இது எதிர்காலத்தில் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது. இது சம்பந்தமாக அண்மையில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை தலைவர் ரிப்தி முப்தி மற்றும் சிரேஸ்ட உலமாக்களிடம் நான் பேசியிருந்தேன். அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். இது தொடர்பில் பல ஆபத்தான செய்திகள் எங்களுக்கு கிடைத்து வருகின்றது என்று என்னிடம் கூறினார்கள்.
இது தொடர்பில் பல அரசியல் தலைமைகளுடன் பேசி இருக்கின்றோம். எனவே இந்த கட்டத்தில் எந்தெந்த பதவியில் யார் யார் இருக்கின்றார்களோ, அவர்கள் இன்னும் அலட்சியம் இல்லாமல், பொத்துவில் பிரதே சபை தவிசாளர் களத்தில் இறங்கி தனக்குரிய சட்டத்தை அல்லது அதிகாரத்தை கையில் எடுத்து, ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் வர வேண்டும்.
தேசிய ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அதே போன்று இதற்கு பொறுப்பான உல்லாசத்துறை அமைச்சர் தலையிட்டு இந்த விடயத்தில் உள்ள சதிகளை அடையாளம் கண்டு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அண்மையில் கூட இலங்கை சட்டத்தை பொருட்படுத்தாமல் இரண்டு இஸ்ரேலியர்கள் – இந்த நாட்டின் பிரஜைகளை தாக்கிய விடயம் அவர்களுடைய ஆணவத்தையும் அவர்களின் அதிகாரப் போக்கினையும் வெளிப்படையாக காட்டி இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.



