தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹலிய தரப்பினருக்கு எதிரான வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக – பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (09) உத்தரவிட்டார்.

பிரதிவாதிகள் திட்டமிட்ட திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் – பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ​​மேற்கூறிய விசாரணை தொடர்பாக பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

பிரதம நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தனர்.

அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்த பிரதம நீதவான், பிரதிவாதிகள் திட்டமிட்ட திகதிகளில் – மேல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவருடைய மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று (9) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரூ. 97 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறி, அவர்களை லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் முன்னர் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்த, அவர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.