
நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள் சுமார் 30 பேர், வேறு பணிகளில் சேர்வதற்காக நாடாளுமன்றப் பணியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகம், வழங்கல், நிதி மற்றும் ஹன்சார்ட் (Hansard) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோரே இவ்வாறு விலகியுள்ளனர். இவர்களில் கணிசமானோர் பட்டதாரிகள் ஆவர்.
பல அதிகாரிகள் நாடாளுமன்றப் பணியிலிருந்து விலகி – வேறு பணிகளில் சேரச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு விலகியவர்களில் பெரும்பாலோர்- தனியார் துறைக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறுகிய காலமொன்றுக்குள் இவ்வளவு அதிகமான ஊழியர்கள் – நாடாளுமன்றப் பணியிலிருந்து விலகுவது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற ஊழியர்கள் முன்பு அனுபவித்து வந்த – விடுமுறை நாட்களைப் பயன்படுத்தாமைக்கான கொடுப்பனவு (leave encashment) சலுகை மற்றும் பிற படிகள், சலுகைகள் ஆகியவை நிறுத்தப்பட்டதே அவர்கள் பணியிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளன என்று தெரியவருகிறது.
அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவைத் தொடர்ந்தே – விடுமுறை நாட்களைப் பயன்படுத்தாமைக்கான கொடுப்பனவு சலுகை நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



