தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர; உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே தாய்லாந்து பயணம்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்த போதும், அதற்கு முன்பே – அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.

கொலைக் குற்றம் ஒன்றுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆயினும், கொலை செய்யப்பட்ட சாந்த தொடங்கொட என்பவரின் மனைவி, முன்னாள் ராஜாங்க அமைச்சரை பிணையில் விடுவித்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரேமலால் ஜயசேகரவுக்கு உச்ச நீதிமன்றம் பயணத்தடை விதித்தது. மேலும், அவரையும் அந்தக் கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலும் இருவரையும் ஒக்டோபர் 21ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, பயணத் தடையை நடைமுறைப்படுத்த முற்பட்டபோது, பிரேமலால் ஜயகேசகர ஓகஸ்ட் 31ஆம் திகதியன்றே, தாய்லாந்துக்குச் சென்றிருந்தது தெரியவந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்தது. இந்தத் தகவலை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து 2015-இல் கஹவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக் குற்றத்துக்காக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, சபரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வஜிர தர்ஷன் டி சில்வா ஆகியோருக்கும் ரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் – மேன்முறையீடு செய்தமைக்கு இணங்க, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.