தலைப்புச் செய்திகள்

நீருக்கு பதில் காற்று வருகிறது; அதற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர்: நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பில் முறைப்பாடு

நீர் குழாய்களைத் திறந்தால், நீருக்குப் பதிலாக பல சமயங்களில் வெறும் காற்று மட்டுமே வருவதாக, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையில்- நீரிணைப்பைப் பெற்றுக் கொண்ட, அட்டாளைச்சேனைப் பாவனையானர்கள் தெரிவிக்கின்றனர்.

பல இடங்களில் இவ்வாறான நிலை உள்ளதாகவும், குழாயைத் திறந்தால் பெரும் சத்தத்துடன் காற்று மட்டுமே வெளியேறுவதாகவும் பாவனையாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு காற்று மட்டும் வெளியேறும் போதுகூட, நீர்மானி (மீற்றர்) இயங்குவதாகவும், பல அலகு நீர் பாவித்ததைத் போல், மாத இறுதியில் காட்டுவதாகவும் பாவனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இறுதியில், காற்றுக்கும் சேர்ந்து தேசிய நீர் வழங்கல் அதிகாரசபையினர் கட்டணம் அறவிடுவதாகவும் – பாவனையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில், நீர் வழங்கல் அதிகாரசபையின் அட்டாளைச்சேனை பிரதேச காரியாலயத்தில் முறையிட்ட போதும், எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.