
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பொதுமக்களின் வளவுகளுக்குள் யானைகள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என – கவலை தெரிவிக்கப்படுகிறது.
”எனது வளவிலுள்ள தென்னை மரங்கள் மற்றும் சுற்றுமதில் ஆகியவற்றை யானைகள் கடந்த மூன்று வருடங்களாக சேதப்படுத்தி வருகின்றன, 2023ஆம் ஆண்டில் யானைகள் ஏற்படுத்திய தேசங்களுக்கு இழப்பீடு கிடைத்தது. ஆனால் – கடந்த வருடம் ஏற்படுத்திய சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர்” என்று பாதிக்கப்பட்ட நிஷாட் கூறுகின்றார்.

அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் அமைந்துள்ள மேற்படி நபரின் வளவுக்குள் நேற்றிரவு (03) சுற்று மதிலை உடைத்துப் புகுந்த யானைகள், அங்கிருந்த தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
”யானைகள் ஏற்படுத்திய சேதங்களுக்கு இழப்பீடு கோரி – கடந்த வருடம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஊடாக, வனவிலங்குகள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், அவர்கள் இழப்பீடு வழங்க முடியாது என்று நிராகரித்து விட்டனர். 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் செப்டம்பர் மாதங்களிலேயே, எனது வளவுக்குள் யானைகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தின” என நிஷாட் தெரிவித்தார்.
நெல் வயல்களுக்குள் யானைகள் வராமல் விவசாயிகள் காவல் காக்கும் காலங்களில், யானைகள் இவ்வாறு ஊருக்குள் புகுவதில்லை. நெல் அறுவடை முடிந்த பின்னர், யானைகள் ஊருக்குள் நுழைந்து சேதங்களை விளைவிக்கின்றன.



