தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் வீடுகள் வழங்கப்பட்டமையை ரத்துச் செய்ய தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு, கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட சலுகைகளை ரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அரகலய போராட்டத்தின் போது, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – நகர அபிவிருத்தி அதிகாரசபை நிர்மாணித்த வியத்புர வீட்டுத்தொகுதியில் 101 வீடுகளை, ஒருவருட வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு 2022.07.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், குறித்த வீடுகளை சலுகை முறையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அதற்கமைய, 15.5 மில்லியன் குறைந்தபட்ச விலை மற்றும் 22 மில்லியன் உயர்ந்தபட்ச விலைக்கு – சாதாரண மக்களுக்கு விற்பனை செய்கின்ற வீடொன்றை 13.34 குறைந்தபட்ச விலை மற்றும் 18.21 மில்லியன் அதிகபட்ச விலைக்கும், சலுகை முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், விற்பனை விலையில் 25 சதவீதத்தை ஆரம்பக் கட்டணமாக அறவிட்டு, எஞ்சிய தொகையை 15 வருடங்களில் 10 ஆண்டுக்கான வட்டி வீதத்தின் கீழ், அவர்களிடமிருந்து அறவிடுவதற்கும், 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த முறைமையின் கீழ், வீடுகளைக் கொள்வனவு செய்வதற்காக 29 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2024.12.31 அன்று வரை விற்பனை விலையின் 25 சதவீதத்தை வைப்பிலிட்டனர்.

எனினும், இச்சலுகை முறையால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு 92.126 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், செலவை ஈடு செய்வதற்கு இயலாமலும் போயுள்ளது. 

அதனால், மேற்குறிப்பிட்டவாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சலுகை முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்வதற்கும், குறித்த 29 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன்பாடு தெரிவிப்பின் – சாதாரண மக்களுக்குக் குறித்த வீடுகளைக் கொள்வனவு செய்யும் முறை மற்றும் விலைக்கமைய அவர்களுக்கும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்பான செய்தி: முன்னைய அரசாங்கத்தில் வீடுகளைப் பெற்ற முன்னாள் எம்.பிகளின் பெயர்கள் வெளியானது: முஷாரப்புக்கு சுமார் 16 மில்லியன் ரூபாய் வீடு