தலைப்புச் செய்திகள்

இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே உள்ளன: முஸ்லிம்களை புறக்கணித்தார் ஸ்ரீதரன் எம்.பி

இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் மட்டுமே இருப்பதாக – தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அவர் இன்று (22) பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார்.

”இந்த நாட்டிலே இரண்டு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று, தமிழ் பேசும் மக்கள் – தமிழ் தேசிய இனம், மற்றையது சிங்களத் தேசிய இனம்” என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் ஸ்ரீதரன் இவ்வாறு கூறியபோதும், எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுமில்லை, முஸ்லிம்கள் மூன்றாவது தேசிய இனம் என்று கூறவுமில்லை.

இலங்கையில் முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக சிங்களவர்களும் அங்கீகரித்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம்களை தனித்த ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளாமல் பேசியுள்ளமை கவனிப்புக்குரியது.

சில வாரங்களுக்கு முன்னர் – யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றில் உரையாற்றும் போதும், நாட்டில் சிங்களவர், தமிழர் எனும் இரண்டு தேசிய இனங்களே உள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.