தலைப்புச் செய்திகள்

பொத்துவில் பிரதேச சபையில் ஆட்சியமைக்க மு.காங்கிரஸ் தலைமையில் வியூகம்: முஷாரப் அணிக்கு ‘அல்வா’

– மரைக்கார் –

பொத்துவில் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமையக்கக் கூடிய வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

20 ஆசனங்களைக் கொண்ட பொத்துவில் பிரதேச சபையில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் தலைமையிலான அன்னாசியை சின்னமாகக் கொண்ட சுயேட்சை அணி 08 எனும் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக முஸ்லிம் காங்கிரஸுக்கு 05 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் முஷாரப்புடன் இணைந்து பொத்துவில் பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் ஒரு முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ஈடுபட்டு வந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளை முஷாரப் மற்றும் ரஊப் ஹக்கீம் ஆகியோர் நடத்தினர்.

ஆனால், பொத்துவில் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ்காரர்களுக்கு, முஷாரப்புடன் கூட்டணியமைப்பதில் உடன்பாடில்லை என்பதோடு, அவ்வாறு முஷாரப்புடன் மு.காங்கிரஸ் தலைமை கூட்டணி அமைத்தால், கட்சியிலிருந்த பிரிந்து செல்வதற்கும் முஸ்லிம் காங்சிரஸின் பொத்துவில் பிரதேச ஆதரவாளர்கள் பலரும் முடிவெடுத்தும் இருந்தனர்.

இந்த நிலையிலேயே, முஷாரப்பை தவிர்த்து, பொத்துவில் பிரதேச சபைக்குத் தெரிவான வேறு 05 பேரின் ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் பெற்று, 10 பேர் கொண்ட அணியாக – பொத்துவில் பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு, பொத்துவில் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் அணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸின் 05 ஆசனங்கள், தமிழரசுக் கட்சியின் 02 ஆசனங்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சி 02, மாம்பழ சின்ன சுயேட்சைக்குழு 01, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 01 மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (கதிரைச் சின்னம்) 01 என, அந்தக் கூட்டணி அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொத்துவில் பிரதேச சபைக்குத் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் 02 உறுப்பினர்களும் யாருக்கு ஆதரவு வழங்குவார்கள் என இன்றும் அறிய முடியவில்லை. எப்படியிருந்தாலும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுடன் இணைத்துப் பேசப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தலைமை தாங்கும் அணிக்கு – தேசிய மக்கள் சக்தியினர் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.

எனவே, பொத்துவில் பிரதேச சபையில் பெரும்பான்மை ஆசனங்களை எந்தத் தரப்பும் பெறாத நிலையில், அதிக ஆசனங்களை முஷாரப் அணி பெற்றுக் கொண்ட போதும், அவர்களால் ஆட்சியமைக்க முடியாது என்பதே தற்போது கிடைக்கும் தகவலாகும்.

இதேவேளை, பொத்துவில் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முன்னாள் தவிசாளர் எஸ்.எம். வாசித்துக்கு, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி – இரண்டு வருட காலத்துக்கு வழங்கப்படவுள்ளதாக பொத்துவில் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அண்மையில் மு.காங்கிரஸ் தலைவரை – பொத்துவில் பிரதேசத்து முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் – வாசித் தலைமையில் சந்தித்தபோது, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரண்டு வருடங்களுக்கு வாசித்துக்கு வழங்கவுள்ளதாகவும், அதற்கு வாசித்தை தயாராகுமாறும், ரஊப் ஹக்கீம் கூறியதாக அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.