
ஈரானின் ஃபொர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அனைத்து அமெரிக்க விமானங்களும் இப்போது ஈரானிய வான்வெளியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஃபோர்டோ மீதான அமெரிக்க தாக்குதலை ஈரான் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப்பின் ஆலோசகரான மஹ்தி முகமது கூறியுள்ளார்.
“அணுசக்தி தளம் நீண்ட காலத்துக்கு முன்பே வெளியேற்றப்பட்டு விட்டது. மேலும் தாக்குதலில் எந்த மீளமுடியாத சேதமும் ஏற்படவில்லை” என்றும் மஹ்தி முகமது குறிப்பிட்டுள்ளார்.
‘இரண்டு விஷயங்கள் நிச்சயம் உள்ளன. முதலாவதாக, அறிவை குண்டுவீசி அழிக்க முடியாது. இரண்டாவது, சூதாட்டக்காரர் இந்த முறை தோற்றுப் போவார்’ எனவும் அவர் தெரிவித்டதுள்ளார்.
மறுபுறமாக, ஃபோர்டோ மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு உள்ளூர்வாசிகள் “பெரிய வெடிப்புக்கான எந்த அறிகுறிகளையும் உணரவில்லை” என்று ஈரானின் உத்தியோபூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் நிலைமைகள் முற்றிலும் இயல்பானவையாக இருப்பதாகவும், அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ நிபுணர்களால் தெரிவிக்கப்படும்” IRNA குறிப்பிட்டுள்ளது.
ஆயினும், மேற்படி தாக்குதல்களை ட்ரம்ப் “அற்புதமான வெற்றி” என்று கூறியுள்ளார். ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து சுயாதீனமான உறுதிப்படுத்தப்படவில்லை என, அல் ஜெசீரா குறிப்பிட்டுள்ளது.
நிலத்தின் அடியில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஏற்கனவே தளத்திலிருந்து நகர்த்தப்பட்டதாக ஈரானிய அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்கா மேற்படி தாக்குதல்களை நடத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தமையை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதிக்கும் அமெரிக்கர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.



