
மின்சாரக் கட்டணத் திருத்தத்தை இலங்கை பொறுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தாம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று (18) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தைப் பராமரிக்கும் அதே வேளை, நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி – இந்தக் கட்டணத் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பான செலவுகள் கணிசமாக உயர்ந்த போதிலும், 2014 முதல் 2022 வரை மின்சாரக் கட்டணங்கள் மாறாமல் இருந்தாகவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
“எரிபொருள் விலைகள், நிலக்கரி, உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அந்தக் காலகட்டத்தில் சீராக அதிகரித்தன. ஆனால் நிதி தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு விலைகளை உயர்த்தாமல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கியது” என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் அதிக கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டதோடு, விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இப்போது மின்சார சபை அதன் ‘மரபு கடன்’ என்று குறிப்பிடுவதன் உச்சத்தை அடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம் – அத்தியாவசிய செயல்பாட்டு செலவுகளை படிப்படியாக மீட்டெடுப்பதையும், இந்த மரபு கடனை நிர்வகிப்பதையும், விநியோகஸ்தர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதையும் உறுதி செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் தடையற்ற மின்சார சேவைகளைப் பராமரிப்பதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானதாகக் கருதப்படுவதாகவும் அறிவிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை மலிவு விலையில் வைத்திருப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், செலவுகளைக் குறைப்பதற்கும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் குறைந்த விலை எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் செயல்திறன் மேம்பாடுகள் உள்ளிட்ட நீண்டகால துறை சீர்திருத்தங்களில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.



