தலைப்புச் செய்திகள்

ஐ.ரி.என் தொலைக்காட்சியில் சிறுவர் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பானதாக குற்றச்சாட்டு

அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என் எனும் சுயாதீன தொலைக்காட்சியில், ஒளிபரப்பான வார இறுதி நாடகமொன்றில் – சிறுவர்களின் ஆபாச காட்சிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, கடும் விமர்சனங்கள் எழுந்தன.

வார இறுதியில் ஒளிபரப்பான குறித்த நாடகத்தில், சிறுவர்களின் ஆபாச வீடியோவின் மங்கலான ஆனால் அடையாளம் காணக்கூடிய வகையில் ஒளிரப்பப்பட்டதாக சமூக ஊடகங்களில் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கையில், ஆபாச காட்சிகளை உருவாக்குவது, விநியோகிப்பது அல்லது வைத்திருப்பது, அதற்காக சிறுவர்ககளைப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டம் பிரிவு 286A இன் கீழ், அதே போல் ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும்.

சர்ச்சைக்குரிய காட்சி ஐ.ரி.என் தொலைக்காட்சியின் உத்தியோகபூர்வ யூ-டியூப் சேனலிலும் பதிவேற்றப்பட்டது.

இது தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், இன்று திங்கட்கிழமை (12) காலை 9.30 மணியளவிலேயே அது யூ – டியூப் சேனலில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டதாக ஏசியன் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.