தலைப்புச் செய்திகள்

போக்குவரத்து மீறல்களில் ஈடுபட்ட 04 ஆயிரம் சாரதிகள் மீது, CCTV காட்சிகளை வைத்து சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கெமராக்களில் இருந்து பெறப்பட்ட காட்சிகளின் அடிப்படையில் 4,000க்கும் மேற்பட்ட சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து மீறல்களில் ஈடுபட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறித்த அறிவிப்புகள் – சம்பந்தப்பட்ட சாரதிகளின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கெமராக்கள் மூலம் – போக்குவரத்து மீறல்களை அடையாளம் காணும் திட்டம் கடந்த வருடம் பெப்ரவரி 01ஆம் திகதி தொடங்கப்பட்டது.

அதன்படி, ஏப்ரல் 20, 2025 நிலவரப்படி, போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக 4,048 சாரதிகள் மீது அபராதம் விதித்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், முறையாக வாகன உரிமங்கள் மாற்றப்படாத 241 வாகனங்களின் புதிய உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனம் விற்கப்படும் போது உரிமையை மாற்றுவது கட்டாயம் என்று பொலிஸ் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 724 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 764 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜனவரி 01 ஆம் திகதி முதல், மொத்தம் 1,535 பெரிய விபத்துகளும் 2,699 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளது.