
– அஹமட், படங்கள்: எம்.எப். நவாஸ் –
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த பி.ரி.எம். இர்பான் நேற்றைய தினம் (21) இடமாற்றலாகிச் சென்றுள்ளார். இதன்போது, அவரின் சேவையைக் கௌரவித்து – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அவருக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.
புதிய செயலாளராக ஏ.சி. அஹமட் அப்கர் பதவியேற்றுள்ளார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட அப்கர் – காத்தான்குடியில் திருமணம் முடித்துள்ளார்.
இடமாற்றலாகிச் செல்லும் பிரதேச செயலாளர் இர்பான் – கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அவர் குறுகிய காலமே அட்டாளைச்சேனையில் பணியாற்றியுள்ள போதும், அதனை ‘பொற்காலம்’ என – அட்டாளைச்சேனை மக்களும், பிரதேச செயலக ஊழியர்களும் மகிழ்வுடன் கூறுகின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் காணப்பட்ட ஊழல், மோசடி மற்றும் நிர்வாகத் திறனற்ற தன்மைகளை, தனது பணிக்காலத்தில் இல்லாதொழித்த பிரதேச செயலாளர் இர்பான், மக்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.
பொதுமக்கள் தமது வேலைகளை முடிப்பதற்காக – கடந்த காலங்களில் பிரதேச செயலகத்துக்கு நீண்ட நாட்கள் அலைய வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றிய பிரதேச செயலாளர் இர்பான், ஓரிரு நாட்களுக்குள் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிர்வாக முறைமையினை தனது பணிக் காலத்தில் உருவாக்கினார்.
கடந்த வெள்ள அனர்த்த காலத்தில் மக்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதற்கு முன்னரே – ஊரிலுள்ள பொது அமைப்புக்களை இணைத்துக் கொண்டு, மக்களுக்குத் தேவையான உதவிகளை – பிரதேச செயலாளர் இர்பான் பெற்றுக் கொடுத்து, பலரின் பராட்டுக்களையும் பெற்றார்.
ஓட்டமாவடியை சொந்த இடமாகக் கொண்ட பி.ரி.எம். இர்பான் – திம்புலாகல பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில், அட்டாளைச்சேனைக்கு இடமாற்றப்பட்டார்.
தற்போது, அட்டாளைச்சேனையில் 14 மாதங்களே பணியாற்றிய நிலையில், வெலிகந்த பிரதே செயலாளராக இடமாற்றலாகிச் சென்றுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகப் பதவி வகித்தோரில் – ஊழல், மோசடி உள்ளிட்ட எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல், பணியாற்றிச் சென்றுள்ள ஒரு சிலரில், பி.ரி.எம். இர்பானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம்



