
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, விசாரணை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட – விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் – அசங்க கரவிட்ட தலைமை தாங்குகின்றார்.
அந்த குழுவின் உறுப்பினர்களாக – குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் பயங்கரவாதப் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க; “பிரதான குழுவின் கீழ், மேலும் பல உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன” என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், 66,000இற்கும் அதிகமான பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையை தொடர்ந்து ஆய்வு செய்யும் போது கண்டறியப்படும் புதிய தகவல்களின் அடிப்படையில் – புதிய விசாரணைகள் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைக்காக நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



