
நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத் இன்று (11) கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
துபாயில் இருந்து நாடு திரும்பிய அவரை – இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்யக்கூடாது என்று 2024 ஆம் ஆண்டு – பொலிஸ் அதிகாரியொருவருக்கு டான் பிரியசாத் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நிக்கவெரட்டிய பொலிஸ் குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில், டான் பிரியசாத்துக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையை கல்கமுவ நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்ததுடன், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணையினையும் பிறப்பித்திருந்தது.
இந்தப் பிடியாணைக்கிணங்கவே அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
டான் பிரிசாத் எனும் மேற்படி நபர், முஸ்லிம்களுக்கு எதிரான – இனமுறுகல் செயற்பாடுகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



