தலைப்புச் செய்திகள்

பொதைப்பொருள் பாவித்த 17 பொலிஸார் பணி நீக்கம்

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 17 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (11) தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்பு பொலிஸ் பிரிவு மூலம் போதைப்பொருள் பயன்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸாருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய பொலிஸார் வைத்திய பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும், போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பொலிஸார் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் மன்னிப்பு அல்லது இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படாது. ஏனெனில் இதுபோன்ற சில நபர்கள் முழு பொலிஸ் சேவையையும் அவமதிக்கிறார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.