
இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிப்பதை – மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளமையை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறுவதாகவும், பலஸ்தீனியர்களை தொடர்ந்து கொல்வதாகவும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதைத் தடுப்பதாகவும் ஹமாஸ் குற்றஞ்சாட்டி – கைதிகளை விடுவிப்பதை இடைநிறுத்தியுள்ளது.
இதனையடுத்து இஸ்ரேலிய ராணுவம் தனது படையினருக்கான விடுமுறையை ரத்து செய்துள்ளதோடு, காஸா பகுதியைச் சுற்றி தனது படைகளை அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.
இது இவ்வாறிருக்க, இஸ்ரேலிய கைதிகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான ஒரே வழி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை மதிப்பதுதான் என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என்று, ஹமாஸின் மூத்த அதிகாரி சமி அபு ஜுஹ்ரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“இரு தரப்பினரும் மதிக்க வேண்டிய ஒரு ஒப்பந்தம் உள்ளது என்பதையும், கைதிகளை மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரே வழி இதுதான் என்பதையும் ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும். வாய் சண்டித்தனத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. இது விடயங்களை மேலும் சிக்கலாக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
போர்நிறுத்தத்தின் கீழ் – திட்டமிடப்பட்டபடி சனிக்கிழமை இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், “நரகம் உடைந்து விடும்” என்று பலஸ்தீனியர்களை ட்ரம்ப் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



