தலைப்புச் செய்திகள்

அரச பதவி வகித்துக் கொண்டு அமைச்சராக இருப்பவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு மனுத்தாக்கல்

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த விஜேபாலவை கடந்த வருடம் நொவம்பர் 18ஆம் திகதியன்று பொது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நியமித்ததாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜனாதிபதியின் பணிக்குழாம் தலைமை அதிகாரியாகவும் ஆனந்த விஜேபால நியமிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் கூறுகிறார்.

அரசியலமைப்பின் 91வது பிரிவின்படி, பொது சேவையில் ஈடுபட்டுள்ள ஒருவர் நாடாளுமன்றத்தில் அமரவோ அல்லது நாடாளுமன்றத்தில் வாக்களிக்கவோ தகுதியற்றவர் என்பதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் பணிக்குழுாம் தலைமை அதிகாரி பதவி என்பது, ஓர் அரச பதவி என்றும், அதன்படி, அமைச்சர் ஆனந்த விஜயபால அந்தப் பதவியை வகிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அரசியலமைப்பின்படி ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று தீர்ப்பளிக்கவும், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யவும் மனுதாரர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மேலும், மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராக அமர்வுகளில் பங்கேற்பதற்கும், பொது பாதுகாப்பு அமைச்சராக செயல்படவும், நாடாளுமன்றத்தில் வாக்களிக்கவும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.