
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர், அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று கேள்வியெழுப்பினார்.
அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் இன்று (16) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் பி.ரிஎம். இர்பான் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் தாஹிர் – அட்டாளைச்சேனை பிரதேச வீதிகள், வடிகான்கள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமான முன்மொழிவுகளை சமர்ப்பித்தார்.
அதேவேளை, 2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அதி விஷேட வர்த்தமானியின் பிரகாரம் நடைமுறைப்படுத்துப்பட்ட ஒலுவில் – 01, அல்- ஹிரா நகர், ஆலிம் நகர் போன்ற பிரதேசங்களின் 16 கிறவல் வீதிகளின் அபிவிருத்திகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் – நாடாளுமன்ற உறுப்பினர் தாஹிர் கேள்வியெழுப்பினார்.
மேலும், இதுவிடயம் தொடர்பிலான தகவல்களையும் விளக்கங்களையும், ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா அவர்களிடம் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் தாஹிர் கேட்டுக்கொண்டார்.
மேற்படி வீதி அபிவிருத்திகள் தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையில் எதுவித அனுமதிகளும் பெறப்படவில்லையென தெரியவந்துள்ளதுடன், கிரவல் வீதிகளுக்கு மேலால் மீண்டும் கிறவல்களை இட்டு, மக்கள் வரிப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் தாஹிர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)



