
போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு – இஸ்ரேலின் இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்ததால், காஸாவில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 21 பலஸ்தீன குழந்தைகளும் 25 பெண்களும் அடங்குவர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியவற்றுக்கிடையிலான போர் நிறுத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) அமுலுக்கு வருகிறது.
கட்டார் தலைநகர் தோஹாவில் எட்டப்பட்ட மேற்படி போர் நிறுத்த ஒப்பந்தமானது, இஸ்ரேலியப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுதல், இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்புதல் மற்றும் போருக்கு நிரந்தர முடிவு காணுதல் உள்ளிட்ட ஹமாஸின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதாக, ஹமாஸ் அதிகாரி இஸ்ஸாத் அல்-ரிஷேக் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 7, 2023 முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில், குறைந்தது 46,788 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 110,453 பேர் காயமடைந்தனர்.
2023 ஒக்டோபர் 07ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது இஸ்ரேலில் குறைந்தது 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
தொடர்பான செய்தி: காஸாவில் போர் நிறுத்தம்; 19ஆம் திகதி அமுலுக்கு வருகிறது: ஆனாலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது



