
சிவப்பு அரிசி இந்தியாவில் கிடைக்காததால், அங்கிருந்து சிவப்பு அரிசியை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க – சிவப்பு அரிசியை இறக்குமதி செய்வதற்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய வழங்குநர்களுடன் அரசாங்கம் பேசியதாகவும், ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவிலலை எனவும் அவர் நேற்று (09) நாடாளுமன்றத்தில் கூறினார்.
நாட்டில் உள்ள ஆலைகளிலும் சிவப்பு அரிசி கிடைக்கவில்லை என்றும், நிலைமையை எப்படியாவது சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு, முந்தைய அரசாங்கம் – சிவப்பு அரிசியை இலவசமாக விநியோகித்தது பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ளது என்றும், பியர் தொழில், கோழிப்பண்ணைகள், அலங்கார மீன் தொழில் ஆகியவற்றுக்கும் அரிசி மாவுக்கும் அரிசி பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.



