தலைப்புச் செய்திகள்

அரச காணிகள் பங்கிடப்பட்டமையில் முறைகேடுகளா?; விசாரணை ஆரம்பம் என, பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க

2015ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட அரச காணிகள் தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் – ஊடகங்களிடம் பேசும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

“காணி சீர்திருத்த ஆணைக்குழு (எல்ஆர்சி) மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்திற்கு நிலம் ஒதுக்கப்படுகிறது. இருந்தபோதிலும், கடந்த காலங்களில் காணி விநியோகம் மற்றும் காணி பரிமாற்றம் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் யாருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் விசாரணை மேற்கொள்ளப்படும் வரை காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக – காணி ஒதுக்கீடுகளை இடைநிறுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

“எந்த திட்டங்களுக்கு, எந்த அடிப்படையில்? இந்த காணிகள் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதில் ஏதேனும் ஊழல் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய்வதற்காகவும், இந்த விசாரணையை துரிதமாக நடத்த இலக்கு வைத்துள்ளோம்” என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.