
– அபு அலா –
க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி கடந்த ஆண்டு கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 02ஆம் இடத்தைப் பெற்றுள்ள போதும், இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர்களும், ஆசிரியர்களும் புறக்கணிக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தினசேகரவை நேரில் சந்தித்து, குறித்த விடயம் பற்றிய தகவலை அவரின் கவனத்திற்கு – தான் கொண்டு வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கூறினார்.
கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தர பரீட்சை அடைவு மட்டத்தில் பின்னடைந்திருந்த கிழக்கு மாகாணம், கடந்த ஆண்டு 02ஆம் இடத்திற்கு முன்னேறியிருந்தது. இதற்காக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் மாகாணக் கல்வி அமைச்சு செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பாராட்டுப் பத்திரம் (Commendation) வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதேபோன்று மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரினால் – வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாராட்டுப் பத்திரம் (Commendation) வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
எனினும், அடைவு மட்ட அதிகரிப்புக்கு பிரதான காரணமாக இருக்கின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் எவரும் இது விடயத்தில் கௌரவிக்கப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெரிதும் மன உழைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும் இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற பாரபட்சங்கள் தங்களது நிர்வாகத்தின் கீழ் இனிமேல் இடம்பெறாதிருக்கும் வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் கிழக்கு ஆளுநரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, குறித்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் விரைவில் கௌரவிக்க ஏற்பாடு செய்ய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநரை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேட்டுள்ளார்.



